சிந்தனை 1

‘செல்லாத காசுக்குள்ளும் செப்பு இருக்கு’னு சொல்வாங்க. என் வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட ஒரே விஷயம் இதுதாங்க. அடுத்த மனுஷனை மதிக்கணும். அவரையும் நம்மோட ஒருத்தரா நேசிக்கணும். இங்க பெரியவங்க, சின்னவங்கனு யாரும் இல்லை. எல்லாப் பெரியவங்களுக்கும் ஒரு ‘நேத்து’ இருக்கும். அதுபோல சின்னவங்களுக்கும் ஒரு ‘நாளை’ இருக்கும். எனக்கு டீ தர்றான் ஒரு பையன். அது அவர் வேலை. அவர் எங்க வீட்டுக்கு வந்தா நான்தான் அவருக்கு டீ எடுத்துட்டு வந்து தருவேன். தரணும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் மனுஷங்க மகான்களாவறது பெரிய விஷயம் இல்லை; மனுஷங்களாவே இருக்க முடிஞ்சா… அதுதாங்க சந்தோஷம்!”

-தேவா

சிந்தனை 2

வாழ்வதற்கான செலவு மிகவும் குறைவு…
அடுத்தவன் போல் வாழ்வதற்குத் தான் செலவு அதிகம்…!!

கணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார். ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள். கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்..

அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ். முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல்கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே! இலையில் வைத்த ‘ஜாங்கிரியை’ மூத்தவனுக்கு பிடிக்கும்என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும்இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? எல்லாம் கியா முய என்று கத்தி தொலையுதுங்க அத்தனையும் குரங்குகள்.! சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே… என்று பாய….

அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா… என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.! விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், ‘ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ‘ என்று அலற.. ஓஹோ, அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க…

அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை.

இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்ஒரு பெண்ணின் பங்கு தலையாயது. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது..ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால் தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்…

வெற்றித் தோற்காமல் இருப்பதில் இல்லை; தவறுகளைத் திருப்பிச்செய்யாமல் இருப்பதில் இருக்கிறது

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

ஆமை புகுந்த வீடு உருப்படாது??

கல்லாமை,உண்மை பேசாமை,பெரியோர் பேணாமை,சுற்றம் சேர்க்காமை,அன்பு செலுத்தாமை போன்ற ஆமைகள் புகுந்தால் அந்த வீடு முன்னேறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.எனவே, இந்த இல்லாமைகள் அகற்றி வாழ்க்கையில் இன்புற வேண்டும்

ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.

ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

அடியாத மாடு படியாது

உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் “என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் ‘நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்’ என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்

அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

வாழ்க்கையின் உண்மை

ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.
ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான்.
அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான்.
ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான்.
பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.
அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான்.
ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.
ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.
ஒருநாள்…
அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான்.
எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான்.
அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள். அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான்.
அவளோ நீயோ சாகப்போகிறாய்.
நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான்.
அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.
நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’
நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன்.
உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த
வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.

1. நான்காவது மனைவி நமது உடம்பு.
நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை.
நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.
அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள்.
அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.
நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.